தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் இல்லை – அமைச்சர் சந்திரசேகர்

தோட்ட தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் இல்லை. அவரை தோட்டத் தொழிலாளர்கள் கைகழுவிவிட்டனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற புலமை சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உரையாற்றுகையில்,

நாட்டில் அண்மைக்காலமாக தேவையில்லாத பீதியை சிலர் கட்டவிழ்த்து வருகின்றனர். அதில் ஒன்றாக குடிநீருக்கும் ஆபத்து வந்துவிட்டது என்ற பீதியைக் கிளப்புகின்றனர் இவ்வாறான பீதிகளை உருவாக்குவதற்கு கடந்த 76 வருடங்களாக நாட்டினுடைய சொத்துக்களை சூறையாடியவர்கள் எமது பொருளாதாரத்தை பூண்டோடு அழித்தவர்கள். 

அரச சொத்துக்களை தங்களது சொத்துக்கள் என நினைத்து தங்களது பாட்டன், பூட்டன் மாமன், மச்சான் என எல்லோருக்கும் பகிர்ந்துகொண்டு அதன் மூலம் கோடீஸ்வரர்களாக, குபேரர்களாக மாறிய நபர்கள் காரணகர்த்தாக்களாக உள்ளனர் எனக் கூறிக்கொண்டிருந்த போது சபையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.

அதில் அவர், ஷானக்க எம்.பி. ஆதாரபூர்வமான ஒரு அறிக்கையின் பிரகாரம் குழாய் குடிநீரில் குரோமியம் 10 எம்.ஜியில் இருக்கவேண்டியது 14 எம்.ஜியில் உள்ளது என நிரூபித்துள்ளார் அதற்கு அமைச்சர் வசந்த சமரசிங்க ஆராய்ந்து பதிலளிப்பதாக கூறியுள்ளார்.

அப்படி இருக்கையில் நீங்கள் பாட்டன், பூட்டன் என பேசிக்கொண்டிருக்கின்றீர்களே என கூறிக்கொண்டிருந்தபோது அவரின் ஒலிவாங்கி முடக்கப்பட்டது.

இதனையடுத்து அமைச்சர் சந்திரசேகர் தனது உரையைத் தொடர்ந்து மேற்கொள்ளும்போது, உறுப்பினர் அவர்களே தோட்ட மக்களைப் பற்றி பேசுவதற்கு இனிமேலும் உங்களுக்கு அருகதையில்லை. நான் உங்களுடன் வாக்குவாதப்பட இந்த இடத்திற்கு வரவில்லை. குடிநீர் தொடர்பில் பீதியை கிளப்ப சிலர் முயற்சிக்கின்றனர்.

அதில் உண்மையிருந்தால் நாம் வெளிப்படுத்துவோம் என்றுதான் நான் கூறினேன். எனவே நீங்கள் இதில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.  

தோட்ட தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை பார்ப்பதற்கு நாங்கள் இருக்கின்றோம். தோட்டத் தொழிலாளர்கள் உங்களை கைகழுவிவிட்டுள்ளார்கள். தோட்டத் தொழில்துறை அமைச்சர் சமந்த வித்தியாரத்ன இருக்கின்றார். அவர் அந்த வேலையை நல்ல முறையில் பார்க்கின்றார். எனவே தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பில் நீங்கள் வெறுமனே அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *